×

50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்

நெல்லை: அரசு அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த கும்பலும் சிக்கியது. இவர்கள் தொழிலதிபர்களிடம் இருந்து சுருட்டிய பணத்தில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்தும், வட்டிக்கு விட்ட சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது உள்ளது. சேலம் மாவட்டம், அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்யானந்தம் (47). இவர், பிரபல காற்றாலை நிறுவனத்தின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெல்லை என்ஜிஓ ‘சி’ காலனியை சேர்ந்த பானுமதி (42) என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வசித்து வரும் பானுமதி, சமூக வலைதள சாட்டிங் மூலம் ஆசைவார்த்தை கூறி நித்யானந்தத்தை நெல்லைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து கடந்த 29ம்தேதி நெல்லை வந்த நித்யானந்தம் பானுமதியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். அப்போது திடீரென பக்கத்து அறையில் பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட கும்பல், இவர்களது அறைக்குள் புகுந்து அவரை மிரட்டி புகைப்படம் எடுத்தனர்.

பின்னர், இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த 2.5 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம், ஏடிஎம் கார்டு, கிரடிட் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். அவரது செல்போனில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.75 ஆயிரம் பணத்தையும், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.60 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.மறுநாள் நித்யானந்தத்தை காரில் கடத்திச் சென்ற அக்கும்பல் அவரிடம் செக்கில் மிரட்டி கையெழுத்து பெற்று பொன்னாக்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கியின் கிளையில் அவரது நடப்பு கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்தனர்.

இதனிடையே காரில் கடத்திச் செல்லும் போதே அக்கும்பலுக்கு தெரியாமல் தன்னுடன் வேலை செய்யும் நண்பருக்கு செல்போன் மெசேஜ் மூலம் நித்யானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திகடந்த 30ம் தேதி மாலை பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டம் கேடிசி நகரைச் சேர்ந்த சுடலை (40), மழவராயநத்தம் வெள்ளத்துரை (42) மற்றும் பார்த்தசாரதி (46) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர். நித்யானந்தந்தை கடத்திச் செல்ல பயன்படுத்திய வெள்ளத்துரைக்கு சொந்தமான கார், 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பானுமதி, பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித், வெள்ளத்துரை உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி செய்தல், ஆள் கடத்தல், முறையற்ற சிறை வைப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பானுமதி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன்னுடன் படித்த பள்ளி நண்பரான வெள்ளத்துரையுடன் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் மோசடி திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். வெள்ளத்துரை, ரஞ்சித் உள்ளிட்டோர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. பானுமதி பல்வேறு சமூக வலைதளங்களில் தன்னிடம் பழகும் 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசு உயரதிகாரிகளிடம் ஆசைவார்த்தை கூறி பாளை.

என்ஜிஓ காலனிக்கு வரவழைத்து ஆபாசமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இதுவரை சுமார் ரூ.70 லட்சம் பணம், 45 பவுன் நகையை பறித்துள்ளார். இக்கும்பலால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பலரும், வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி புகார் செய்யவில்லை. இந்த கும்பலின் மூளையாக செயல்பட்ட பானுமதியும், வெள்ளத்துரையும் தொழிலதிபர்களிடம் பறித்த பணத்தை முழுவதுமாக வட்டிக்கு கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த பணத்தில் பொன்னாக்குடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை கடத்தல் மற்றும் சிறை வைப்பு போன்ற சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

என்ஜிஓ காலனியில் உள்ள பானுமதியின் அப்பார்ட்மென்ட் வீட்டில் சோதனை செய்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் பெயரிலான பணம் நிரப்பப்படாத 50க்கும் மேற்பட்ட காசோலைகள், 30க்கும் மேற்பட்ட புரோ நோட்டுக்கள் உள்ளிட்டவை சிக்கியுள்ளது. சிலரது வீடியோக்கள், போட்டோக்கள் அடங்கிய பல பென் டிரைவ்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தொழிலதிபர்களை கடத்தும்போது லட்சக்கணக்கில் ஒவ்வொருவருக்கும் பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு சுடலை, பார்த்தசாரதி, ரஞ்சித் ஆகிய மூவரும் கோவா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானத்தில் சென்றுள்ளனர். இவர்கள் அடிக்கடி விமானத்தில் கோவா சென்று அங்கு துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து உள்ளனர். இந்த கும்பல் தமிழ்நாடு முழுவதும் கைவரிசையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் மீது புகார்கள் குவிந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* மாதத்துக்கு 2 தொழிலதிபர்கள் இலக்கு
பானுமதி தலைமையிலான இந்த கும்பல் மாதத்திற்கு 2 தொழிலதிபர்களை மட்டுமே குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்து நகை மற்றும் பணத்தை பறித்து வந்துள்ளனர். பின்னர் அதனை 5 பேரும் சமமாக பங்கிட்டுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அந்த பணம் தீர்ந்த பின்னர் மீண்டும் பேஸ்புக் மூலமாக தொழிலதிபர்களுக்கு வலைவீசி அவர்களை சிக்க வைத்து பணம் பறித்துள்ளனர்.

* தொழிலதிபர்களை விசாரிக்க முடிவு
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி கூறுகையில், ‘நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பலின் நடவடிக்கைகளை முழுமையாக விசாரித்து வருகிறோம். இவர்களால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தும் விசாரணைக்குப் பின் புகாரளிக்கப்பட்டால், பானுமதி மற்றும் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதில் மேலும் பல தகவல்கள் தெரியவரலாம்’ என்றார்.

* சென்னை தொழிலதிபர் தப்பினார்
சேலம் தொழில் அதிபரிடம் பணத்தை பறித்த பின்னர், சென்னையை சேர்ந்த தொழில் அதிபரை இதேபோல் வரவழைத்து அவரிடமும் பணம் பறிக்க இந்த கும்பல் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் இந்த கும்பலை பிடித்ததால் பணம் பறிப்பில் இருந்து சென்னை தொழிலதிபர் தப்பினார்.

* காரில் அமமுக கொடி
கைதான வெள்ளத்துரை காரில் அமமுக கொடியுடன் உலா வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்த மோசடி கும்பலிடம் வசமாக சிக்கியுள்ளார். அவரை வழக்கம்போல தங்கள் பாணியில் மிரட்டிய இக்கும்பல் 7.5 பவுன் செயின் மற்றும் ரூ.5.30 லட்சம் பணம் கறந்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

* வலையில் வீழ்த்தியது எப்படி
பேஸ்புக்கில் சாட்டிங் செய்யும் போது பானுமதி தான் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், தனது குழந்தைகளுக்கும் தனக்கும் உதவுங்கள் என்றும் உருக்கமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் இரக்கப்பட்டு பலர் தொடர்ந்து பணம் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் நெருக்கமாக பேசி, எனக்காக எவ்வளவோ செய்து விட்டீர்கள் உங்களுக்காக நான் என்ன செய்தாலும் தகும் என்று கூறி ஆசையை தூண்டிவிட்டு, அதன் பின்னர் நெல்லை வரவழைத்து, வேலையை காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்

The post 50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Goa ,Nellai ,
× RELATED யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு...